Tuesday 13 April 2010

இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

பசியால் துடிதுடிக்கும் பிள்ளை,  வறுமையின் கொடுமையை வரிகளில் வைத்த கொடுமை. இதுபோல் எத்தனை பிள்ளைகள் பசியால் துடிதுடித்து செத்து இருக்கும்? இன்னும் சாகும்?

ஊழல், லஞ்சம் என உழைப்பாளர்கள் வீணடிக்கப்பட்டு விட்டதை விடிய விடிய எழுதிய விரல்களில் வலி. இன்னும் ஊழல்களாலும் லஞ்சத்தினாலும் வலி குறையாத மானுடம்.

கற்பு, பெண்கள், குழந்தைகள், என ஐம்புலன்களின் அடக்கம் பற்றி அதி சிரத்தையுடன் எழுதப்பட்ட விசயங்கள். பாலியல் கொடுமையால் பாழடிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

மதம், கடவுள் என்றே நல்வழி சொல்வதாய் புராணங்கள், பல நூல்கள். அதே மதங்கள் உற்சாகப்படுத்தும் தீவிரவாதங்கள். எத்தனை மனிதர்கள் உயிர் இழந்து போனார்கள்? பிரிந்தும் போனார்கள்?

விளை நிலங்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் குறித்து எழுதப்பட்ட குரல்கள். அழுகுரல்களைத் தவிர ஏதும் மிச்சமில்லை.

படிப்பதன் குறித்த அவசியம்! ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு. ஏமாறும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை?

சாதி, இனம், மொழி வேற்றுமையில் ஒற்றுமை. வரி வரியாய் சொன்ன விசயங்கள். வேற்றுமை களைவதே ஒற்றுமை என வெறுப்பை வளர்க்கும் கூட்டங்கள்.  எதுவும் முடிவதாய் தெரியவில்லை.

இப்படி எத்தனை எத்தனையோ விசயங்கள் எழுதியும், சொல்லியும் எதுவும் மாறவில்லை. இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

Friday 9 April 2010

சாதிக்கலாம்னு இருக்கு

செத்துரலாம்னு இருக்கு. எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. மாணவர்களின் நிலையை எண்ணியும், தங்களது பணியை நினைத்தும் பல ஆசிரியர்கள் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.  முதன் முதலில் இப்படியொரு விசயத்தை பல ஆசிரியர்கள் தங்களது மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என கேள்விபட்டபோது எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஆசிரியர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது கலக்கம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆசிரியர்கள் ஒழுங்காகச் சொல்லித் தரமாட்டேன்கிறார் என மாணவர்கள் சொல்லும்போது ஆசிரியப் பணிக்கு சென்று விடலாமா என மனம் எண்ணுகிறது. ஆனால் அதே மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம்தனை பார்க்கும் போது எதற்காக ஆசிரியப் பணிக்குச் செல்ல வேண்டுமென மனம் தடை போட்டு விடுகிறது.

போட்டிகள் நிறைந்ததுதான் இந்த உலகம். இது அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. சக மனிதர்களை மிதித்துதான் முன்னேற வேண்டுமெனில் அதை தைரியமாகவே செய் என்பதுதான் நடைமுறைப்படுத்தப்பட்ட கோட்பாடு. அடுத்தவர்களுக்கு வலிக்கும் என தயவு தாட்சண்யம் பார்த்துக் கொண்டிருந்தால் உங்களது வலியை பகிர்ந்து கொள்ள எவரும் வந்து நிற்க மாட்டார்கள் என்பதுதான் உலகம் கண்டறிந்த தத்துவம்.

மாணவர்களை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஆசிரியர்கள் திணறித்தான் போகிறார்கள். பலதரப்பட்ட மனநிலை கொண்ட மாணவர்களை திறம்பட நடத்துவது என்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலான விசயமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்களுக்கென சொல்லப்பட்ட 'வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை' எனும் சொல்வழக்கு இன்றும் மனதில் ஒருவித வலியைத் தந்துவிட்டேச் செல்கிறது.  எத்தனை மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் பொறுப்புதனை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?  படிப்பு என்பது ஒரு கடைநிலை விசயமாகவே மாணவர்களில் பலர் கருதுகிறார்கள் என்பது கண்கூடான உண்மை. இப்படிப்பட்ட மாணவர்களை நெறிப்படுத்துதல் என்பது என்ன எளிதான வேலையா? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிதான வேலையாகவேத் தெரிகிறது. ஏனெனில் வடையும், காபியும், வீட்டு சொந்த வேலையை செய்ய சொன்ன ஆசிரியர்கள் என பலர் நமது கண்களில் தெரிகிறார்கள்.

'என் தந்தை பணக்காரர், நான் ஏன் படிக்க வேண்டும்'  'பணம் சம்பாதித்த பலர் என்ன படித்தார்கள்?' என்றே மாணவர்களால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பணம் சம்பாதிக்க எந்த ஒரு பட்டமும் அவசியமும் இல்லை, எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும் தான். அதுகூட பல நேரங்களில் அவசியமில்லை. பணம் மூலம் ஒரு கல்வியாளாரை விலைக்கு வாங்கி, உதவியாளராக வைத்துக் கொள்வது என்பது ஒன்றும் பெரிய கடினமான விசயம் இல்லை. மேலும் பணம் சம்பாதிக்க ஒரு பெட்டிக்கடை போதும். அயராத உழைப்பும், முயற்சியும், சிந்திக்கும் வல்லமையும், அதை செயல்படுத்தக்கூடிய திறனும் மூலதனமாக இருக்கும் பட்சத்தில் பணம் சம்பாதித்தல் ஒரு பெரிய விசயமே இல்லை என்றுதான் ஒரு இட்லி கடை வைத்தவர் பல ஹோட்டல்களுக்கு அதிபதியானார் என அறியலாம்.

மேலும் படித்தவர்கள் ஆயிரம் யோசனைகள் செய்வார்கள். படிக்காதவர்கள் ஒரு யோசனைதான் செய்வார்கள். ஆயிரம் குறிக்கோள்கள் உடையவர்கள் ஒரு குறிக்கோளினையாவது முறையாக அணுகுவார்களா என்பது கேள்விக்குறியே. இப்படியிருக்கும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கென தரப்படும் சம்பளமும், மரியாதையும் சமூகத்தில் ஒரு இழிநிலை தொழிலாகவே ஆசிரியப்பணி கருதப்பட்டு வருகிறது. இந்த ஆசிரியர்கள் தங்களது வாழ்வில் எத்தகைய காரியங்களைச் செய்யவல்லக் கூடியவர்கள் என சற்று சிந்தித்துப் பார்த்தால் மொத்த உலகத்தையே ஒரு நேர்வழிப்பாதையில் கொண்டு செல்லும் திறன் படைத்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் எத்தனை ஆசிரியர்கள் தங்களது கடமையுணர்வை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்?

ஒரு வகுப்பில் அறுபது மாணவர்கள் இருந்தால் அதில் இருபது மாணவர்கள் நன்றாகப் படிக்கக்கூடியவர்கள், மற்ற இருபது மாணவர்கள் சுமாராகப் படிக்கக் கூடியவர்கள், அதற்கடுத்த இருபது மாணவர்கள் படிப்பை சுத்தமாக வெறுக்கக் கூடியவர்கள் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஆசிரியர்களின் நிலை என்ன? அனைவரையும் நன்றாக படிக்க வைத்து அனைவரையுமே சிறந்தவர்களாக கொண்டு வருவதுதான், ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணை எதுவென அறிந்தால் தலைசுற்றல் தான் வந்து சேரும். ஆம், கடைசி இருபது மாணவர்களை கண்டு கொள்ள வேண்டாம், அனைவரும் அறிவாளிகள் ஆகிவிட்டால் ஒரு சில வேலைகள் செய்வது எவர் என்றே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். என்ன ஒரு கோட்பாடு? மாணவர்கள் தாங்கள் என்ன வேலை செய்ய விருப்பப்படுகிறார்கள் என விட்டுவிடவும் முடியாது, ஏனெனில் பலருக்கு ஒரு தெளிவான முடிவுதனை எடுக்கும் பக்குவம் இருப்பது இல்லை.

படித்துவிடுவதால் வரும் பெரும் பிரச்சினைகள் அளவிடமுடியாதவை. இவ்வளவு படித்துவிட்டு எதற்கு இந்த வேலை செய்கிறாய்? என்றே கேட்கப்படும் கேள்விகளால் மனம் உடைந்து போவோர்கள் எத்தனை பேர்? படித்தவர்கள் எத்தனை பேர் விவசாயம் பார்க்கிறார்கள்? அதே வேளையில் 'அவன் படிக்காதவன், அப்படித்தான் இருப்பான்' என்பது எத்தனை செளகரியமாக இருக்கிறது.

இந்த ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்கு உட்படுவது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒன்றும் அதிசயமில்லை. மாணவர்களால் மட்டுமல்ல, பெற்றோர்களினாலும் ஆசிரியர்கள் பெரும் அவதிக்கு உட்படுகிறார்கள். வீட்டிலிருந்தே நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லித் தர இயலுமெனில் பள்ளிக்கூடம் எதற்கு என்றே பெற்றோர்களின் மனநிலை இருக்கிறது. ஒரு ஆசிரியர் சொல்லித் தருவதை திறம்பட பின்பற்றும் மாணவரே முன்னுக்கு வருவார் என்பதை ஏன் பெற்றோர்கள் உணர்வதில்லை! தங்களது பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்காமல் பொறுப்புகளை தட்டிக்கழிக்கும் பெற்றோர்கள் எத்தகையவர்கள்?

நாம் ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தான். கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் என நாம் ஒவ்வொரு நிமிட வாழ்க்கையிலும் அறிந்து கொள்வது என்பது அளவிடமுடியாதது. இதில் ஆசிரியர்கள் என அவர்களுக்கு மட்டும் தனி பொறுப்பு என்பது எவர் போட்ட சட்டம்? ஆசிரியர்களே, உங்கள் கடமையை நீங்கள் சரி வரச் செய்து வாருங்கள், செத்துரலாம்னு இருக்கு எனச் சொல்வதை விட்டுவிட்டு இன்னும் இன்னும் சாதிக்கலாம்னு இருக்கு என சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த இடுகையை அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

Wednesday 7 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 5

5. கதிரேசன் கல்லூரிக்குச் சென்றான். விடுதியைவிட்டு ஏன் வெளியே அனுப்பினார்கள், இப்பொழுது எங்கே தங்கி இருக்கிறாய் என சிலர் கேட்டு வைத்தார்கள். கதிரேசன் வேறு என்ன காரணம் என்று யோசித்து வைக்கவில்லை. சிங்கமநல்லூரில் ஒரு வீட்டில் தங்க இடம் கொடுத்திருக்கிறார் ஒருவர் என்று மட்டுமே சொல்லி வைத்தான்.

கல்லூரியில் இருந்த நேரம் நன்றாகவே இருந்தது. விடுதியைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட விசயம் மனதில் வலியை ஏற்படுத்தி இருந்தாலும் தங்க ஓர் இடம் இருப்பது சற்று ஆறுதலைத் தந்து இருந்தது. அம்மாவுக்கு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். மாலை வேளையில் வீட்டுக்கு கிளம்பும்போது கதிரேசனை கல்லூரி வளாகத்தில் மதுசூதனன் பார்த்தான்.

''இப்போ எங்கே இருக்க நீ'' என்றான் மதுசூதனன். ''சிங்கமநல்லூர்ல இருக்கேன்'' என்றான் கதிரேசன். ''ஏன் உன்னை வெளியே அனுப்பினாங்க, ஏன் காலையில என்கிட்ட அப்படி சொன்ன'' எனக் கேட்டான் மதுசூதனன். ''சொல்சிவனே அப்படினு சிவனை நோக்கி நான் பாடின பாட்டுதான் என்னை விடுதியை விட்டு வெளியே போக வச்சிருச்சி, என்னை அப்படி பாடக்கூடாதுனு பிரின்சிபால் சொன்னாரு'' என கதிரேசன் சொன்னதும் ''பாடமாட்டேனு சொல்ல வேண்டியதுதான, நான் சிவனைத் தொழுவதே இல்லை'' என மதுசூதனன் சொன்ன நேரம் சிவநாதன் அவர்களை கடந்தார். ''பிரின்சிபால்'' என மெதுவாக கூறியவாரே மதுசூதனனைத் தட்டினான் கதிரேசன். ''யாரா இருந்தா என்ன, நான் சிவனைத் தொழுவது இல்லை'' என அழுத்திச் சொன்னான் மதுசூதனன். சிவநாதன் திரும்பினார்.

''இங்கே வாங்க'' என அவர்களை அழைத்தார் சிவநாதன். கதிரேசன் மிகவும் பயந்து இருந்தான். மதுசூதனன் தைரியமாகவே நடந்தான். மதுசூதனனை நோக்கி ''நீ சிவனை தொழாம இருக்கிறதுனால சிவனுக்கு ஒன்னும் ஆகப்போறது இல்லை, நீ எந்த இறைவனையும் தொழுதுக்கோ, ஆனா எந்த இறைவனையும் ஒருபோதும் இப்படிச் செய், அப்படிச் செய், ஏன் இப்படி இருக்க, பதில் சொல்லுனு மட்டும் பேசாதே. நாம எல்லாம் தொழ மட்டுமே சிவன்'' என்றார் சிவநாதன். ''நான் வைணவம் ஐயா'' என்றான் மதுசூதனன். ''அதான் சொன்னேன்ல, சொன்னது புரியலையா'' என்றார் சிவநாதன். மதுசூதனன் பதில் பேசாமல் நின்றான். கதிரேசன் தலையை குனிந்தபடியே நின்றான். ''ஒழுக்கம் முக்கியம், காலேஜ்லயோ வெளியிலேயோ பிரச்சினையை உண்டுபண்ண வேண்டாம், யார் பெரியவங்க, யார் சிறியவங்கனு, போய் படிக்கிற வேலையை மட்டும் பாருங்க'' என சொல்லிவிட்டு நடக்கலானார்.

''ஏன் நீ இப்படி பேசற'' என்று கேட்டான் கதிரேசன். ''நீ ஏன் அப்படி பாடின'' எனக் கேட்டான் மதுசூதனன். கதிரேசனால் பதில் சொல்ல இயலவில்லை. அமைதியானான். ''எனக்கு என்னோட குலம் முக்கியம், என் உயிர் போகிற தருணமா இருந்து சிவனால் தான் என்னை காக்கமுடியும்னு இருக்கும் நிலை வந்தாலும் நான் சிவனைத் தொழமாட்டேன், எனது வேண்டுதல் எல்லாம் விஷ்ணுகிட்ட மட்டும் தான்'' என கண்கள் மல்கச் சொன்னான் மதுசூதனன். கதிரேசன் அதிர்ச்சி அடைந்தான். ''திருமால் முதற்கொண்டு அனைவராலும் தொழப்படுபவர் சிவன், நீ அறிஞ்சது இல்லையா'' என கதிரேசன் சொன்னதும் ''எழுதி வைச்சதெல்லாம் யார்னு போய் படி உனக்குப் புரியும் இனி அதைப்பத்தி பேச எனக்கு விருப்பமில்ல, நான் போறேன்'' என மதுசூதனன் விறுவிறுவென நடந்து சென்றான். கதிரேசன் மனம் சஞ்சலமானது.

வீட்டினை அடைந்தான் கதிரேசன். வயதானவரிடம் விசாரித்தான். நீலகண்டன், சிங்கமநல்லூர் பிறப்பிடம். மனைவி இல்லை. மகள் மட்டுமே உண்டு. திருமணமாகி மகன் பேரன் பேத்திகளுடன் சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார்கள் என சொன்னார். தன்னைப்பற்றி சொன்னான் கதிரேசன். அதனுடன் கல்லூரியில் நடந்த விசயத்தையும் மதுசூதனன் பற்றியும் சொன்னான்.

''அந்த காலேஜ் முதல்வரை எனக்கு நல்லாத் தெரியும், அவர் சொல்றதுல தப்பு இல்லை. ஆனா நான் நீ பாடக்கூடாதுனு சொல்லமாட்டேன். உன்னோட விருப்பம். அதுபோல மதுசூதனன் சொல்றதுலயும் தப்பு இல்லை. அது அவனோட விருப்பம். நான் பூஜை பண்ணப் போறேன், நீ படி'' என்றார் நீலகண்டன். பூஜையில் கலந்து கொள்வதாக சொன்னான் கதிரேசன். நீலகண்டன் புன்னகையுடன் அவனைப் பார்த்தார்.

(தொடரும்)