Saturday 29 August 2009

கடவுளோடு காதல்

என்னில் முதன் முதலாய் காதல் உன்னோடு
பச்சிளம் குழந்தையாய் பால்மணம் மாறாத காதல்
பருவம் வந்தபின்னும் மாறவில்லை
உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்

நான் பாமாலை சூட்டும் போதெல்லாம்
வாய் திறந்து நீ பாராட்டியது இல்லை
மலர் எடுத்துச் சூடும் போதெல்லாம்
மறுத்து ஒதுக்குவதில்லை நீ
உன்மீது எனக்கு மனம் மாறா காதல்

பால் கொண்டும் நெய் கொண்டும்
அமிர்தம் கொண்டும்
அபிஷேகம் செய்தபோதெல்லாம்
அதனை நீ ருசித்ததும் இல்லை
மெய்மறந்து ரசித்ததும் இல்லை
அன்பு நெஞ்சம் உன்மீது என் அணையாத காதல்

உலகத்துக்கு எல்லாம் ஒளி தரும் உனக்கு
ஒரு சிறு தீபம் ஏற்றி உனக்குக் காட்டி
என் தீராத காதல் சொல்கிறேன்
ஏற்றுக் கொள்வாய் எம்பெருமானே

உன்னைத் தனி அறையில் பூட்டிவைத்து
யான் உறங்கச் செல்லும்போதெல்லாம்
என்னை நீ ஆட்கொள்ளமாட்டாயோ
என்னும் அளவில்லாத காதல் உன்னோடு
பரபிரம்மமே உனக்கு பணிவிடை செய்ய
எந்தன் காதலை ஏற்றுக்கொள்
இனி ஒரு பிறவியும் வேண்டிலேன்!

Friday 28 August 2009

கடவுள்

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பிறந்ததினால் நன்றி கூற
தலைமுடி காணிக்கை
கடவுள் பழக்கம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்
சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

கோவில்களின் வேலைப்பாடுகள் மத்தியில்
கையெடுத்து கும்பிட வைக்கும்
சிலையாய் கடவுள்

கடவுள் காட்சி தருகிறார்
மனிதர் காட்டும் வித்தைகள்

எங்கும் தேடாதே
ஒளிந்திருக்கும் உன்னில் கடவுள்
சொற்பொழிவாளரின் சொல்வன்மை

எல்லாம் கடந்து உள்ளவன்
எல்லை இல்லாதவன்
தவத்தினால் வருகை தந்தவன்
வரம் எல்லாம் அள்ளி தந்தவன்
வெறும் காட்சிகளாய் கதைகளாய் இன்று

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது
கடவுள் மனிதராய்
மனிதர்களே கடவுளாய்.

Thursday 27 August 2009

திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்!

பன்னிரண்டு வயதில் எங்கள் கிராமத்தில் அமர்ந்து எழுதப்பட்ட ஒரு கதை. நானும் எனது மாமா மகனும் அந்த கதையை எட்டு காட்சிகளுடன் எழுதினோம். கதையின் தலைப்பு மறந்துவிட்டது. திரைப்பட இயக்குநர் திரு.கே.பாலசந்தர் அவர்களுக்கு அனுப்பலாம் என முடிவு செய்தோம். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டோம். இப்பொழுது அந்த கதை எங்கே போனது எனத் தெரியாது.

எனது மாமா மகனுக்கு இசைத்துறையில் மிகவும் ஆர்வம். கவிதைகளும் நன்றாக எழுதுவான். திரைப்படத் துறையில் சேர வேண்டும் எனும் ஆர்வம் அவனுக்கு இருந்தது. எனக்கு ஒரு பாடலாசிரியாராக வேண்டும் எனும் எண்ணம் இருந்தது.

எனது அண்ணன் கிராமத்தில் இருக்கும் சாவடி எனப்படும் ஒரு இடத்தில் வேஷ்டியைக் கட்டித் தொங்கவிட்டு ஃபிலிம் ரோல் மூலம் படம் காட்டியதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மிகவும் வித்தியாசமாக நால்வர் சேர்ந்து ஒரு கதையை எழுதி பேசி டேப்பில் பதிவு செய்து பலருக்குப் போட்டுக் காட்டினோம். பொறுமையாகக் கேட்டவர்கள் 'மிகவும் நன்றாக இருக்கிறதே' எனப் பாராட்டுத் தெரிவித்தார்கள். இதனை உற்சாகமாக எடுத்துக் கொண்டு 'ஜெராகாரா புரொடக்ஸன்ஸ்' என நாங்களாகவே பெயர் சூட்டினோம். நால்வரின் பெயரில் முதல் எழுத்து மட்டும் கொண்டது அது. அந்த பெயர் மூலர் ஒரு கதையை வெளியிடுவதாக ஊரில் கைப்பட எழுதிய சின்ன சின்ன போஸ்டர் ஒட்டினோம். ஆவலுடன் பலரும் வந்தார்கள். நன்றாக இருந்தது எனவும் சொன்னார்கள்.

இப்படியே திரைப்படத் துறையில் எப்படியாவது காலடி பதித்திட வேண்டும் எனும் ஆவலில் திரைப்பட இயக்குநர் திரு.ஆபாவாணன் அவர்களுக்கு ஆறு பாடல்களை எழுதி அனுப்பினோம். அதில் நடிகர் திரு.விஜயகாந்த் அவர்கள் எனக்கு மாமா, மற்ற மூவருக்கும் சித்தப்பா என அறிமுகப்படுத்தி எனது மாமா மகன் எழுதிட அனுப்பினோம். பதிலே வந்தபாடில்லை.

படிப்பு விசயமாக அவரவர் நாங்கள் பிரிந்து சென்றிட புரொடக்ஸன்ஸ் பண்ணாமலேயே முடங்கிப் போனது. நான் வாடாமலர் எனும் கதையை எழுதினேன். அதனை தையல் தைப்பவரிடம் கொடுத்துப் படித்து கருத்துச் சொல்லக் கேட்டதும், அவரும் ஆவலுடன் வாங்கினார். இரண்டு வாரம் கழித்துச் சென்று கேட்டதும் பேப்பர் நன்றாக இருந்தது, அதனால் அதை துணி அளவுக்கு வெட்ட உபயோகப்படுத்திக் கொண்டேன் என்றார். எனக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. வயது மூத்தவர் என்பதால் எந்தவொரு பதிலும் பேசாமல் வந்துவிட்டேன். நகல் எடுக்கும் வழக்கமில்லாததால் ஒரு கதை காணாமலேப் போனது. சில நாட்கள் பின்னர் அவராகவே என்னிடம் வருத்தம் தெரிவித்தார். துணி உருவாக்கும் அவருக்கு ஒரு கதைப் படைப்பு பெரிதாகத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

நான் எழுதித் தந்ததை மேடையில் பேசி முதல் பரிசு வென்றான் நண்பன். கல்லூரியில் கவிஞனாகப் பார்க்கப்பட்டேன். ஆனால் அதெல்லாம் எத்தனை பொய் என்பது பலரின் படைப்புகளை இப்போதுப் பார்க்கும்போதும் சரி, எனது கவிதைகள், கவிதைகளே அல்ல என விமர்சனம் செய்த ஒரு இலக்கிய ஆர்வலரின் விமர்சனம் உண்மை தெரியவைத்தது. இப்போது கவிதைகள் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரட்டும் எனும் ஆர்வம் தான்.

நான் இலண்டன் வந்தபின்னர் எனது மாமா மகன் திரைப்படத் துறையில் சேர்ந்திட முயற்சி எடுத்து பின்னர் சரிவராது என கணினித் துறையில் படித்து முன்னேறி பட்டம் பெற்று லண்டன் வந்துவிட்டான். சில வருடங்கள் முன்னர் திரு.விஜயகாந்த் எனது சகோதரர் வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் அவரைப் பார்க்கச் சென்று இருந்தோம். அமைதியே உருவாக இருந்த அவ்விடத்தில் நான் எப்போதும் போல் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். அப்பொழுது திரு. விஜயகாந்திடம் சின்ன வயது சம்பவங்களைச் சொன்னேன். அது குப்பையில போய் இருக்கும் என்றார் சிரித்துக் கொண்டே. அது சரிதான். நல்ல வேளை, பாடல்கள் வெளியாகி குப்பைக்குப் போகவில்லை.

இப்படியாக திரைப்படத் துறையில் வாய்ப்புத் தேடாமலே எனது சிறுவயது மற்றொரு கனவான ஆராய்ச்சியில் என்னைச் சேர்த்துக் கொண்டேன். ஒருவேளை திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால் சமீபத்தில் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு 'எப்படி இப்படியெல்லாம் வீணாக பணத்தைச் செலவழித்து மோசமாக படம் எடுக்கிறார்களோ' எனக் குறைபட்டுக் கொண்டது போல இல்லாமல் தரமிக்க படங்கள் எடுத்திருப்பேனா என எனக்குத் தெரியாது. பழைய பாடல்களை போலவே அர்த்தம் பொதிந்த புது பாடல்கள் என பாராட்டும்படி பாடல்கள் எழுதி இருப்பேனா எனவும் தெரியாது.

ஆனால் ஒன்று, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்துத் துறையில், ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சித் துறையில் எனது பங்களிப்பு கண்டு நானே குறைபட்டுக் கொள்கிறேன் என்பதுதான் உண்மை.