Showing posts with label பதிவர் மாவட்டம். Show all posts
Showing posts with label பதிவர் மாவட்டம். Show all posts

Thursday 8 July 2010

எழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.

எப்படித்தான் ஆரம்பிப்பது இந்த தொடர்பதிவுதனை. இப்படி தொடர்பதிவு எழுதுவதற்கு சுனிதா கிருஷ்ணனை பாராட்டி எழுதலாமே என நினைத்தால், சுனிதா கிருஷ்ணனுக்கு பாராட்டுகள் அவசியமில்லை, அவரைப் போல வாழ முற்படுபவர்கள்தான் அவசியம்.  அந்த அக்கறை எல்லாம் இம்மண்ணில் உள்ளவர்களுக்கு மிகவும் குறைவு.

மீண்டும் ஒரு அழையா விருந்தாளியாய் இந்த தொடர்தனை ஆரம்பித்துக் கொள்கிறேன். இப்படித்தான் அழையா விருந்தாளியாய் பலரின் மனதில் இந்த கடவுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டுவிட்டார். இவரை எப்படியாவது துரத்தி அடித்து விடவேண்டும் என ஆதி காலத்தில் இருந்தே ஒரு சாரர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் மனதிலும் இந்த கடவுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு விட்டார். எப்படி இந்த கடவுளை துரத்தி அடிப்பது என்பதுதான் அவர்களின் சிந்தனை. அசைந்து கொடுக்கமாட்டார் கடவுள்.

எனக்கு எப்படி இந்த கடவுள் அறிமுகமானார், எப்படி பரிச்சயமானார்.

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்

சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

இதோ மேலே எழுதபட்டிருக்கிற தெய்வங்கள் எங்கள் ஊரில் இருப்பவைதான். அய்யனார் எங்கள் தோட்டத்தில் இருக்கிறார். தெற்கே சுடுகாடு செல்லும் வழியில் இருக்கும் முனியாண்டிக்கு பயந்தது உண்டு. கிழக்கே சூரிய நமஸ்காரம் செய்யும் பெருமாளுக்கு கனிந்தது உண்டு.

முனியாண்டி கோவில் பூசாரியிடம் பேய் ஓட்ட வருபவர்கள் மிகவும் அதிகம். அந்த பூசாரி வீடு எங்கள் வீட்டுக்கு அருகில்தான். அடிக்கப்படும் உடுக்கை சப்தமும், பூசாரியின் சப்தமும் என்னை கண்கள் மூடியே இருக்க செய்தது உண்டு.

இதையும் தாண்டி இரு கடவுள்கள் என வணங்கப்படும் கடவுள்கள் எனது ஊரில் உண்டு.  சிறு குழந்தையாக இருக்கும்போதே தவறிப்போன  நாச்சாரம்மாள். இவருக்கென ஒரு வீடு கோவிலாக இருப்பது உண்டு. எனது நாவலில் இவரையும் எழுதியது உண்டு சற்று மாறுதலுடன். இவருக்கு  பூஜைகள் உண்டு.  மற்றொன்று எனது அம்மாவின் அப்பா சமாதி இருக்கும் தோட்டத்து கோவில்.  குரு பூஜை என நடத்தப்படும் அந்த பூஜையில் அத்தை ஒருவர் சொல்லும் அருள் வாக்கு கண்டு நடுங்குவது உண்டு.

இவர்கள் எல்லாம் கடவுள் என ஒருநாள் கூட மறக்காமல் திருநீர் வைத்து செல்லும் வாழ்க்கை மிகவும் இனிப்பாகத்தான் இருந்தது, கோவில்களில் தரப்படும் பிரசாதங்கள் போல.

மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி பாலாஜி கோவில், திருமோகூர் கோவில், அஷ்டலட்சுமி கோவில்  என பல கோவில்கள் என்னுள் கடவுளை உறுதிபடுத்தி கொண்டன. இந்தியாவில் இருந்தவரை கோவிலில் இருக்கும் சிலைகள் எல்லாம் கடவுளாகவே தெரிந்தார்கள். அந்த நம்பிக்கை கூட ஒருவிதத்தில் நிம்மதியாகத்தான் இருந்தது. எதையும் கேள்வியுடன் பார்க்க வேண்டும் எனும் அக்கறை இல்லை.

இப்படியாக என்னுள் இருந்துவிட்ட கடவுள் மெதுவாக மாற ஆரம்பித்தார். இலண்டன் முருகன் கோவிலுக்கு எதிராக தோன்றியதுதான் இலண்டன் மகாலட்சுமி கோவில். அப்பொழுதுதான் இந்த சிலைகளை கடவுள் எனும் பார்வை விலக ஆரம்பித்தது. ஈ.வெ.ராமசாமி எப்படி கோவில் நிர்வாகத்தில் இருந்தபோது அறிந்து கொண்டாரோ அப்படித்தான் நானும் கோவில் நிர்வாகத்தில் இருந்து பல விசயங்கள் அறிந்து கொண்டேன்.

கடவுள் தண்டிப்பார் எனும் அக்கறை தொலைந்து போனது. கடவுள் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை சிதறிப் போனது. மக்களின் நம்பிக்கையை கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. இதே மக்களின் மனம் குறித்த பார்வை கடவுளை வித்தியாசப்படுத்தியது. எனக்குள் இருந்த நம்பிக்கை விலகி ஒரு தெளிவு பிறந்தது. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கையில் எனக்கு உடன்பாடு இருப்பதே இல்லை. கடவுள் இருக்கிறார் என்றே சொல்லி மக்களுக்கு அவர் அவரின் கடமையை உணர்த்துவதுதான் எளிதாக எனக்குத் தெரிந்தது.

அன்பினை வளர்க்கும் பக்குவம் அவசியம், வெறுப்பினை வளர்ப்பதல்ல. மற்றவர்களை முட்டாள் என சொன்னால் முட்டாளுக்கு கூட கோவம் வரத்தான் செய்யும். அதைத்தான் இந்த கடவுள் மறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள், அதனால் தங்கள் கொள்கை வெற்றி பெற இயலாமல் மிகவும் தடுமாறுகிறார்கள்.

இப்பொழுது எனக்குத் தெரிந்த கடவுள் இப்படித்தான் எழுதினார் என சொல்வது எத்தனை எளிது.

ஞானமற்ற என்னை ஞானிகள் கண்டதாய்
தானமற்ற நெஞ்சம் புண்ணியம் கொண்டதாய்
எல்லாம் கடந்து உள்ளிருப்பதாய் நானிங்கு
சொல்லியதாய் எழுதியது நானல்ல மனிதனே.

நான் எழுதிய எழுத்துக்களில் அதிகம் விமர்சனத்திற்கு உட்பட்டவர் கடவுள் தான். இதுவரைக்கும் அவர் எந்த மறுப்பும் தெரிவித்தது இல்லை. ஒருபோதும் தெரிவிக்கப் போவதுமில்லை. இந்த மனிதர்கள்தான் தேவையில்லாமல் அல்லாடுகிறார்கள்.

சுனிதா கிருஷ்ணன் ஒரு கடவுளாகத் தெரியலாம். நாம் இன்னலுக்கு உட்பட்ட வேளையில் எதிர்பாரா உதவி செய்பவர்களும் கடவுளாக தெரியலாம், அதை எல்லாம் மறுத்து பேசி கொண்டிருக்க மனமும் இல்லை.

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது

கடவுள் பற்றிய தெளிவு எனக்கு இருக்கிறது. அந்த ரகசியம் காப்பாற்றப்படும்.

சொல் என சொல் அதில்
மனமது மயங்கியே சொல்லுக்கு ஆட்பட்டால்
இரகசியம் அது எக்காலத்திலும் இரகசியமாகாது
ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்க இரகசியமாவது

எப்படிப்பட்ட தெளிவு கொண்டபோதிலும் கடவுள் பற்றிய மனிதரின் சிந்தனைகளில் பல எனக்கு விளங்குவதே இல்லை.

முடிவில்லா மாற்றம் கொள்ளும் சக்தி
தோற்றம் சொன்னதில்லை
கடவுள் கண்டதாய்
எந்த ஞானியும் சத்தியம்
செய்தது இல்லை
அன்பை சிவமென கூறி
ஏழையின் சிரிப்பில் இறைவனை சொல்லி
காசை கடவுளாக்கிட
விளங்கமுடிவதில்லை
அவதாரம் வருவதற்கான
காலம் வெகு அருகில் இல்லை.

அவதாரம் இனிமேல் வருமெனில் அதை ஆதாரத்துடன் காட்டிடும் பண்பு நம்மிடம் இருப்பதால் கடவுள் இனிமேல் அவதாரம் எடுக்காமல் போகலாம். ஆனால் கடவுள் மனிதர் மனதில் எப்போதும் இருப்பார்.

Tuesday 1 June 2010

தமிழ் பதிவர்கள்

ஊரு வம்பை விலைக்கு வாங்குவது எப்படி தெரியுமா?

இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உலக பிரச்சினை போல உருவகம் செய்து  அதில் உலை வைத்து குளிர் காயும் யுக்தி பற்றி அறிய வேண்டுமா?

எழுதப்படும் எழுத்துகள் எப்படியெல்லாம் பல கோணங்களில் பார்க்கப்படும் என்பதையும் எத்தனை அருமையாக ஆராய்ச்சிகள் செய்து பல விதங்களில் ஒரு விசயத்தை சிந்தித்து எழுதும் கலை பற்றி அறிய வேண்டுமா?

முக்கியமாக வெளிநாட்டில் வாழும் தமிழ் வாசகர்களே, உங்களுக்கு தமிழில் எத்தனை கேவலமான வார்த்தைகள் இருக்கின்றது என்பதை தெரிந்திட வேண்டுமா?

நகைச்சுவை பற்றி ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டு இருக்கிறேன். அதே நகைச்சுவையால் எப்படியெல்லாம் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

எழுதுவதன் மூலம் உங்கள் மொத்த குடும்பத்தையும் துன்பத்தில் சிக்க வைத்திடும் நிலை அறிய வேண்டுமா?

இப்படி எதிர்மறை நிலைகள் மட்டுமே எழுத்தாகிப் போனதை கண்டு கண்ணீர் வடிக்க வேண்டுமா?

எதற்கெடுத்தாலும், தேசிய பார்வையை ஒழித்துவிட்டு ஜாதீய பார்வையுடன் அணுகும் முறை தெரிந்து கொள்ள விருப்பமா?

நாம் அனைவரும் ஒன்று என்று ஒற்றுமையை நிலைநாட்டுவதாய் கூறிக் கொண்டு முதுகில் அடிகள் தந்திடும் கலை அறிய விருப்பமா?

மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னிறுத்தி மனிதர்களை கீழ்மைபடுத்தும் நிலையை அறிய வேண்டுமா?

வாருங்கள் உலக தமிழ் வாசகர்களே.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மிக மிக சின்ன காரியம் தான். தமிழ் திரட்டிகளை ஒரு முறை பார்வையிட்டால் போதும். அங்கே காணப்படும் பதிவுகளை படியுங்கள். ஆனால் அதைப் பற்றி ஒன்றும் எழுதி விடாதீர்கள். மீறி எழுதினால் நீங்கள் ஊர் வம்பை விலைக்கு வாங்கி விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதெல்லாம் தேவையில்லை, பல நல்ல விசயங்கள் தெரிந்து கொள்கிறோம் என நினைத்தால் புற்களுக்கு மத்தியில் ஒரு சில நெற்கதிர்கள் தென்பட்டுத்தான் கொண்டிருக்கும். அதை தேடி கண்டு கொள்ளுங்கள்.

வாசகர்களாக இருப்பதுதான் மிகவும் சௌகரியம். பதிவர்களாகவோ, எழுத்தாளர்களாகவோ நீங்கள் மாற நினைத்தால் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். எவரேனும் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் திட்டிக் கொண்டிருக்கலாம், அதே வேளையில் வாழ்த்திக் கொண்டும் இருக்கலாம். திட்டுகளை புறந்தள்ளி, வாழ்த்துகளை மட்டுமே தனதாக்கிக் கொள்ளும் திறன் இருப்பின் நீங்கள் நிலைத்து நிற்கலாம்.

இந்த பதிவுலகத்துக்கென பிரத்தியோகமாக எழுதப்பட்ட பதிவுகள் சில உள்ளன. அவை

விவகாரமான எழுத்தாளர்கள் 

யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க 

கருத்துகளும் அதன் சுதந்திரமும் 

ஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது? 

எழுத்துலகில் அரசியல் செய்பவர்களுக்கும், நட்பினை கொச்சைபடுத்துபவர்களுக்கும் எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இனிமேலும் ஏதேனும் பிரச்சினை வரும்போது நான் குரல் கொடுக்கவில்லையென கருதாதீர்கள். எனது பதிவுகள் அதற்காக பேசி முடித்துவிட்டன

தனித்தனி குழுவாக செயல்படுவதை அறவே தவிர்த்துவிடுங்கள். உங்கள் நட்புக்குரியவரோ, மற்றவர்களோ பிரச்சினையில் இருந்தால் அதை எழுதி பெரிதுபடுத்தி ஆதரவு தருகிறேன் பேர்வழி என களங்கப்படுத்த வேண்டாம். மின்னஞ்சல் உண்டு, தொலைபேசி உண்டு. பேசி தீர்த்து கொள்ளும் விசயங்களை எழுதி சிறுமைபடுத்தாதீர்கள்.  சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் பிரச்சினையை தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் எவரும் குழந்தைகள் அல்ல.

எழுதுவதால் பிரச்சினைகளில் சிக்குண்டு தவித்து என்ன செய்வதென புரியாமல் எழுத்துலகைவிட்டு விலகும் பதிவர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழில் எழுதி, தமிழை சிறந்திட செய்யும் அனைவருக்கும் எனது நன்றிகளும், வணக்கங்களும்.

Monday 19 April 2010

வேகமாக இயங்கிட மறுக்கும் வலைப்பூக்கள்

நாம இருக்கிற அவசரத்துல நமக்கு உடனே உடனே எல்லாம் கிடைச்சாத்தான் அடுத்த அடுத்த வேலையை பர்ர்த்துட்டு போக முடியும். இருந்தாலும் சில விசயங்களுக்கு பொறுமையா இருக்கணும் அப்படிங்கிற ஒரு விதி இருக்கத்தான் செய்து. அப்படி நாம பொறுமையா இல்லைன்னா நமக்குத்தான் நஷ்டம்.

அதுவும் இந்த வலைபூக்கள் இருக்கிறதே அது சில நேரங்களில் வலி தரும் பூக்கள் போல ஆகிவிடுகிறது. அது இது அப்படி இப்படினு நம்ம வலைப்பூக்கள்ல இணைச்சி வைச்சிட்டா வலைப்பூக்களோட வேகம் குறைஞ்சி போயிறது பல நாளா நடக்கிற கொடுமை.

எனக்கு சில நேரங்களில பொறுமை இருக்கும், வலைப்பூ திறக்கிற வரைக்கும் இருந்து படிச்சிட்டு போயிறது. சில நேரங்களில அந்த மாதிரி சமயத்தில எதுக்கு படிக்கணும்னு அடுத்த வலைப்பூ பக்கம் திரும்பிரது. இதெல்லாம் எதுக்கு பிரச்சினை அப்படின்னு ரீடர்ல படிக்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க. ரீடர்ல படிக்கிறது எப்படின்னா வீட்டுல உட்கார்ந்து திரைப்படம் பார்க்கிற மாதிரி. ;)

இப்படித்தான் இந்த வலைப்பூ கூட பிரச்சினையில பல நாளா இருந்துட்டு வந்தது. என்னவெல்லாம் பண்ணி பார்த்துட்டேன். ஒன்னும் புரியல. சில நேரங்களில் தமிழ்மண சேவைக்கு காத்து இருக்கிறேன் என வரும். நானும் காத்து இருக்கிறேன்னு இருந்தேன். அப்புறம் அமித் ஜெயினுக்காக காத்து இருக்கிறேன் என வர ஆரம்பிச்சது. அப்போ நான் திருமண பந்தம் அப்படிங்கிற கவிதைக்கு ஒரு படம் இணைச்சிருந்தேன். அப்பத்தான் இந்த அமித் ஜெயின் என்னோட வலைப்பூ தனில் நான் படிக்க கடவு சொல் எல்லாம் கேட்டு வைச்சது. அதற்கப்புறம் படத்தை எடுத்துட்டேன், அது மாதிரி எதுவும் வரலை. ஆனா வலைப்பூ வேகம் குறைய ஆரம்பிச்சது. சரி அப்படின்னு எல்லா உபரிகள் வெளியேற்றினேன். அப்புறம் வேகம் ஆமை வேகம் தான். நமக்கு மட்டும் தான் இந்த பிரச்சினைன்னு நினைச்சேன். ஆனா சகோதரி சித்ரா சொன்னதும்தான் இந்த பிரச்சினையோட தன்மை புரிய வந்தது. நன்றி சித்ரா.

சரி இந்த அமித் ஜெயின் யாருன்னு தேடித் பார்த்தா ஒரு இணைய தளத்துல நான் அமித் ஜெயின் அப்படின்னு ஒரு சின்ன விளம்பரம். என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கறப்ப டெம்ப்ளேட் உள்ளார பார்த்தா இந்த அமித் ஜெயின் கோடிங் இருந்தது. அதை நீக்கினேன். இப்ப வேகமா வேலை செய்கிறது.

இது என்னன்னா நாம எத்தனை பேர் நம்ம பதிவை பார்த்தார்கள்னு பார்க்க ஒரு கோடிங் அது. எத்தனை பேர் பார்க்கிராங்கனு தகவல் பெற போய் பார்க்க வரவங்களுக்கு ஒரு எரிச்சல் தரக்கூடிய கோடிங் நமக்கு தேவைதானா? அது போல வேகமாக இயங்க மறுக்கும் வலைப்பூக்கள் எல்லாத்தையும் ஒரு நிமிஷம் சரி பார்த்துருங்க, படிக்க வரவங்களுக்கு சௌகரியமாக இருக்கும். வேற கோடிங் கிடைத்தால் அதை இணைத்துவிட்டு சரி பார்த்து கொள்ளலாம். நன்றி.

Thursday 15 April 2010

தண்ணீர் கண்ட பின்பு மரம் ஆனேன் - தொடர் பதிவு.


அடுத்த கட்ட அழையா தொடர் பதிவு. தண்ணீரும் மரம் வளர்ப்பதின் பயன்பாடும்.

இந்த பூமியில் மட்டும் எப்படி இவ்வளவு தண்ணீர் வந்ததுனு புது புது கதையா அறிவியலுல படிச்சேன். அட எதுக்கு மத்த கிரகத்தில எல்லாம் இந்த மாதிரி தண்ணி இல்லைன்னு நினைச்சப்போ ஒன்னும் புரியல. வியாழன் கிரகத்தில மீத்தேன் வாயு நீர் மாதிரி ஓடி திரியுதாம். கொமேட்டு கூட பனியாத்தான் இருக்குதாம். செவ்வாயில கூட பனி உறைஞ்சி இருக்காம்.

இப்படி மொத மொதல எல்லாம் கிரகங்களும் சூரியனிலிருந்து வெடிச்சி சிதறி வந்தப்ப எரிமலை குழம்பாக இருந்த இந்த பூமியில எப்போ பார்த்தாலும் அம்மோனியா, மீத்தேன் வாயு தான் இருந்துச்சாம், அதோட நிறைய கரியமில வாயுவும் கூட, கொஞ்சம் நீராவியும் இருந்துச்சாம் . அப்புறம் பூமி குளிர்ந்தப்ப மெதுவா நீராவி எல்லாம் தண்ணியா மாறி பூமியில கொட்டிச்சாம். அப்போதான் முதல் தண்ணீர் இந்த பூமியில உருவானதாம். அதோட மட்டுமில்லாம இந்த கொமேட்டு வந்து மொத்தமா பூமியில தண்ணிய கொட்டிட்டு போச்சுன்னு சொல்றாங்க.

அப்போ முத முத உருவான தண்ணி நல்ல தண்ணியா, உப்பு தண்ணியா அப்படின்னு யாருக்குத் தெரியும். இப்படி இருக்கறச்சே கடலு எல்லாம் உருவாகி இருக்கு. கடலு உருவாகி இருக்குன்னு சொன்னதும் தான் உப்பு தண்ணிதான் முதல வந்துருக்கணும் அப்படின்னு நினைக்க தோணுது. அந்த உப்பு தண்ணியில இருந்துதான் உயிரினங்கள் தோன்றி இருக்கும்னு ஒரு கதை படிச்சேன்.

மெல்ல தாவரங்கள் வர ஆரம்பிச்சதாம். அந்த தாவரங்கள் இந்த தண்ணியையும், கரியமில வாயுவையும் சேர்த்து வைச்சி உணவு தயாரிக்க ஆரம்பிச்சதாம். அப்படி இருந்த சமயத்தில்தான் கரியமில வாயு எல்லாம் குறைய ஆரம்பிச்சி, ஆக்சிஜன் அதிக அளவில உண்டாச்சாம். அப்புறம் தான் மத்த உயிரினங்களும் தோன்ற ஆரம்பிச்சதாம். அதோட வான் படலம் ஒன்னு உருவாச்சாம். இப்படி உருவான தண்ணி, மலைகள் இருக்கிற மூலிகைகள் மேல உரசி ரொம்ப நல்ல தண்ணியா இருந்துட்டு வருதாம். தாவரங்கள் தான் நல்ல தண்ணீர் வர காரணம்.

எல்லா ஒரே நிலபரப்பா இருந்த பூமிய இந்த தண்ணி தான் வந்து பிரிச்சி போட்டுச்சுனு சொல்வாங்க. எங்க பார்த்தாலும் கடலு. ஆனாலும் கடலு உப்பாத்தான் கிடக்கு, அதுக்கு முக்கிய காரணம் சோடியம்னு சொல்றாங்க. நம்ம கிணத்துல குளத்துல இருக்கற தண்ணியில கால்சியம், மெக்னீசியம் எல்லாம் அதிகம் இருந்தா அந்த தண்ணி உப்பு தண்ணி. அது இல்லாம இருந்தா நல்ல தண்ணி.

ஊருல நல்ல தண்ணி கிணறு, உப்பு தண்ணி கிணறுனு இருக்கும். ஊருல தண்ணித் தொட்டி எல்லாம் அப்போ கட்டாமதான் இருந்தாங்க. அதனால எங்கனயாவது போய் நல்ல தண்ணி எடுத்துட்டு வருவாங்க. அப்புறம் ஊருல குழாய் எல்லாம் போட்டாங்க. ஆனா தினமும் தண்ணி விடமாட்டாங்க. காசு வைச்சிருக்கவங்க அவங்க அவங்க வீட்டுக்கு தனியா குழாய் இணைப்பு வாங்கி வைச்சிட்டாங்க. இந்த தண்ணிக்காகவே குழாயடி சண்டை எல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்கும். தண்ணீர்தனை  அதிகமா அனாவசியமா செலவழிக்கக் கூடாதுனு எல்லாருக்கும் தெரியணும். .

அப்புறம் ஊருக்கு பொதுவா போர்வெல் எல்லாம் போட்டு வைச்சிட்டாங்க. அது என்னமோ நல்ல தண்ணியா அமைஞ்சிருச்சி. போர்வெல் போட்டு போட்டு இப்போ எல்லாம் உப்பு தண்ணியா மாறிட்டு வருதாம். இப்படி தண்ணி ஒரு பக்கம் இருக்கறப்ப மரமும் எங்க பார்த்தாலும் ஊருல இருந்துச்சி. நான் படிச்ச பள்ளி கூடத்தில மரக் கன்று எல்லாம் நட்டு வைப்போம். ஊரு ரோட்டோரமா புளிய மரம் எல்லாம் இருந்தது.

மரங்களே இல்லாதப்ப வந்த தண்ணி, மரங்கள் வந்ததும் மழையா பொழிய ஆரம்பிச்சி இருந்துச்சு. மரங்கள் குளிரிச்சியை தருதுன்னு சொன்னாங்க. மலைகள் இருக்குற பக்கம் எல்லாம் நல்ல மழை விழுமாம்ல. எங்க பக்கத்து ஊருல தொடங்கி மெதுவா மரங்களை வெட்ட ஆரம்பிச்சாங்க. மழை பெய்யாம போயிருச்சி. அப்போ அப்போ மழை கஞ்சி எல்லாம் எடுத்துருக்கோம். யாருமே மரத்தை நடுங்கனு சொன்னதில்லை. வேப்ப மரம் மாரியாத்தாவுக்கு சொத்துன்னு சொல்லி வைச்ச ரகசியம் புரியலை.

மரத்தை வெட்ட வேணாம்னு சொன்னா யாரு கேட்கறா. தானா வளருற  மரத்தை மனிசருங்க பண்ணுன காரணத்தால ஒவ்வொருத்தரும் நட்டு வைச்சி வளர்க்க வேண்டியதா போச்சு. அசோக மன்னர் சாலை இருபுறங்களிலும் மரத்தை நட்டு வைக்க சொன்னார். இப்போ ஊருக்கு போயிருந்தப்ப ரோட்டோரம் மரத்தை எல்லாம் காணோம். சாலை விரிவாக்கம் செய்றாங்களாம். மரத்தை நட்டு வைச்சிருவாங்க தானே. அப்படி மரம் இல்லாம பாக்கறப்போ வெறிச்சினு எதையோ பறி கொடுத்ததை போல இருந்துச்சி.


மரம் வளர்ப்போம், மழை பெற வைப்போம். மரம் வளர்ப்போம் மனிதம் வளர்ப்போம். நிலத்தடி நீரை உறிஞ்சாமல் மழை நீரை சேமித்து மேலும் மேலும் மரம் வளர்ப்போம். உலக வெப்பமயமாதல் பத்தி எல்லாரும் கவலை படறாங்க. கவலைபட்டா போதாது, ஒரு செடி என்ன ஓராயிரம் செடி வளர்க்கணும். பயோடீசல் உருவாக்கணும். இந்த தாவரங்கள் நமக்கு மருந்து. நீர் தரும் ஆதாரம்.

எப்பவோ எழுதின கவிதையில கடைசி வரி எனக்கு எப்பவுமே பிடிச்சது. 'எதிர்கால இருளுக்கு நிகழ்கால வெளிச்சம் விதையுங்கள்' தாவரங்கள் இல்லைன்னா எந்த உயிரினமும்  இல்லை. எனவே தாவரங்கள்  பாதுகாப்போம். நீர் சேமிப்போம்

Wednesday 14 April 2010

கதை கதை கேளு - தொடர்பதிவு

சில தொடர் பதிவுகளை எழுத வேண்டும் என்பதின் முதல் கட்டமாக முதல் அழையாத் தொடர் வரிசையில் நுனிப்புல் நாவலில் பங்கு பெற்ற ஒரு கதை மட்டுமே இங்கே அளிக்கப்படுகிறது.  இனி கதையை கேளுங்க, படிங்க. 

வாசன் சாப்பிட்டு முடித்துவிட்டு சுமதியிடம் விபரம் கேட்டான். சுமதியும் தனக்கு பரீட்சை வருவதாகவும் வெளியில் சிலர் காத்துக் கொண்டு இருப்பதாகவும் படிப்பு சொல்லித்தர வேண்டும் என சொன்னாள். ‘’ இன்னைக்கு தோட்டத்தில அதிக வேலை இருந்தது அதனாலதான் வரமுடியல, பாடம் மட்டும்தான இன்னைக்கு’’ என்றான் வாசன். ‘’இல்லை மாமா, பாடத்தோட கதையும் வேணும்’’ என்றாள் சுமதி.

வெளியில் தலைமை சீடரை அனுப்பிவிட்டு என்ன இனியும் காணவில்லை என காத்துக் கொண்டு இருந்தார்கள் செல்வங்கள். அவர்கள் சத்தம் போடாமல் அமைதியாய் இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. வாசன் வந்ததும் பாலு ‘’எனக்கு பாடத்தில பெயிலாப் போய்ருவோம்னு பயமா இருக்கு’’ என்றான். வாசன் ‘’இன்னும் பரீட்சைக்கு நாள் இருக்குத் தான, படிச்சிரலாம்’’ என்றதும் சிறு நம்பிக்கை வந்தவன் போல சரியென தலையாட்டினான். வீட்டின் வெளியில் வெளிச்சம் இருந்தது, அனைவருக்கும் பாய் விரித்து அமரச் சொன்னான் வாசன். அனைவரும் அமர்ந்தனர். பாடங்கள் சொல்லித் தந்தான். ‘’எவ்வள படிச்சாலும் மறக்குது’’ என பாலு தன் நிலையை வாசனிடம் சொன்னதும் ‘’ஒண்ணோட ஒண்ணு ஒப்புமை படுத்தி படிச்சா மறக்காது, இலகுவா ஞாபகம் வைக்க உதவும், நாம மனனம் செய்துதான் படிக்கனும் அதே வேளையில் புரிஞ்சி மனனம் செஞ்சா நல்லது’’ என்றதும் ‘’பரீட்சை முடிஞ்சிட்டா ஜாலிதான்’’ என்றான் பாலு.

வாசன் அதற்கு ‘’பரீட்சை முடிஞ்சாலும் படிச்சிக்கிட்டே இருக்கனும் இல்லைனா 'நூறு நாள் கற்ற கல்வி ஆறு நாள் விடப்போம்' மாதிரி ஆயிரும், இதற்கு அர்த்தம் தெரியுமா’’ என்றான். சுமதி சொன்னாள் ‘’நூறு நாள் படிச்சி ஆறு நாள் படிக்காம விட்டா நூறு நாள் படிச்ச கல்வி மறந்துரும்’’ என்றதும் ‘’ஆமா’’ என்றான் வாசன். ‘’அப்படின்னா படிச்சிகிட்டே இருக்கனுமா’’ என்றான் பாலு. ‘’விசயங்கள் தெளிவுபடுத்திக்கிற படிச்சிட்டுத்தான் இருக்கனும். வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் உபயோக்கிறோம் அப்படிங்கிறது இரண்டாவது பட்சம்’’ என்றான் வாசன்.

‘’படிப்பு அப்படிங்கிரது ஒவ்வொரு விசயத்திலும் இருந்து படிக்கிறது, வெறும் புத்தகப் படிப்பு படிப்பாகாது. விசயம் தெரிய விசயங்கள் படிக்கனும் ஆனா எப்படி நடைமுறையில நடந்துக்கனுமோ அதுக்கு நமது விவேக புத்தியை உபயோகிக்கனும், அதுதான் சிறந்த கல்விக்கு வரைமுறை’’ என்றதும் பழனி ‘’இதை எங்க வாத்தியார் சொல்லமாற்றாரு, புத்தகத்தை படிங்கடா மனப்பாடம் பண்ணுங்கடான்னு சொல்றார்னே’’ என்றான். ‘’நீ எவ்வளவு விசயம் தெரிஞ்சவனா இருந்தாலும் பள்ளிக் கூடத்தில நீ எடுக்குற மதிப்பெண்கள் வைச்சித்தான் உன்னை எடை போடுவாங்க அதனால அவர் சொல்றதுதான் சரி, ஆனா உலக நடப்பு அப்படி இல்ல’’ என்றான் வாசன். பாடங்களை படித்து முடித்தார்கள். வாசன் நாளைக்கு பார்க்கலாம் என்றதும் சுமதி ‘’மாமா கதை’’ என்றாள். வாசன் சற்று யோசித்தவாறே இதோ நான் கேள்விபட்ட கதை சொல்றேன் என ஆரம்பித்தான்

‘’ஒருத்தன் மற்றவர்களுடைய மனசை படிக்கிற படிப்பை எடுத்து நல்லவிதமா படிச்சு முடிச்சான்’’ என்று வாசன் ஆரம்பிச்சதும் ‘’அது என்ன படிப்புன்னே’’ என்றான் பழனி. ‘’அதை ஆங்கிலத்தில சைக்காலஜினு சொல்வாங்க தமிழ்ல மன உளவியல்னு சொல்வாங்க’’ என்றதும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ‘’ சாமி கதை இல்லையா, நம்ம ஊருக்கு வந்தாரே ஒரு தாத்தா அவர் பத்தி இல்லையா’’ என்றான் பாலு. ‘’இல்ல இது வேற கதை’’ என்றான் வாசன். ‘’கதைய சொல்ல விடுங்கள்’’ என்றாள் வேணி.

வாசன் தொடர்ந்தான். ‘’அப்படி அவன் படிச்சி முடிச்சதும் தனது நண்பனோட கிராமத்தை விட்டு தள்ளி தனியா ஒரு வீடு எடுத்து தங்கினான்’’ ‘’அவர் நண்பன் என்ன படிச்சிருக்கார்னே’’ என்றான் பழனி. வாசன் சிரித்துக் கொண்டே ‘’அவன் நண்பன் சட்டம் படிச்சி இருந்தான், இப்படி இவங்க தங்கி இருந்தப்ப படிக்க பள்ளிக்கூடம் பக்கமே போகாத ஒருத்தர் இவனோட தனியான வீட்டை பார்த்து வந்தார்’’ ‘’யாருனே நம்ம முத்துராசு மாமா மாதிரியா’’ என்றான் பழனி. ‘’அப்படியெல்லாம் இல்லை’’ என்று சொல்லிய வாசன் ‘’கதைய கேளு’’ என்றான். ‘’நீங்கதான அண்ணே ஒப்புமை படுத்தி படிக்கச் சொன்னீங்க’’ என்றான் பழனி. மற்றவர்கள் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

‘’அந்த நேரம் பார்த்து அவனது சட்டம் படிச்ச நண்பன் வெளியூருக்கு போயிருந்தான், முன்ன பின்ன தெரியாதவர் இவன்கிட்ட வந்து எனக்கு பசிக்குது ஏதாவது கொடுன்னு கேட்டார்’’ அந்த நேரம் பார்த்து ஏதொ சொல்ல வாயெடுத்த பழனியின் வாயினை மூடினான் பாலு. வாசன் புன்னகைத்துக் கொண்டே ‘’உள்ள வாங்க அப்படின்னு அவரை வரவழைச்சி உணவு தந்தான், அவர்கிட்ட நிறைய நேரம் பேசிகிட்டு இருந்தான், அவரும் நிறைய விசயங்கள் பேசினார் அப்படி பேசிட்டு இருக்கறப்ப நேரம் போறதே தெரியல இருட்டிருச்சு, உடனே அவர் இங்க தங்கிட்டு காலையில போறேன்னு சொன்னதும் சரி அப்படின்னு சம்மதம் தந்து படுக்கச் சொன்னான். புதுசா வீடு போனதால நிறைய விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் வங்கி வைச்சி இருந்தான், சரின்னு தூங்கினாங்க’’ என நிறுத்தினான் வாசன்

‘’என்ன அண்ணே ஆச்சு’’ என்றான் பழனி இம்முறை வாய் மூட வந்த பாலுவின் கைகள் விளக்கி. வாசன் தொடர்ந்தான். ‘’காலையிலே எழும்பி பார்த்தப்ப வீட்டுல இருக்குற பொருட்கள் எல்லாம் காணோம் அந்த ஆளையும் காணோம், அய்யோ ஏமாந்துட்டுமேன்னு தலையில கை வைச்சி உட்காந்துட்டான்’’ என்றதும் ‘’அவன் தான் பிறர் மனசை படிச்சிருக்கிறாரே மாமா பின்ன எப்படி’’ என்றாள் சுமதி. ம்ம் எனச் சொல்லிவிட்டு ‘’அவன் நண்பன் வந்தவுடன் இதை பார்த்து பதறிப் போய் என்ன ஆச்சுனு கேட்டான், அதுக்கு அவன் நேத்து ஒருத்தர் வந்தார் நல்லா பேசினார் பிறகு தூங்கனும்னு சொன்னார் இப்படி பண்ணிட்டு போய்ட்டார்னு’’ சைக்காலஜி படிச்சவன் சொல்ல சட்டம் தெரிஞ்சவனுக்கு கோவம்னா கோவம் ‘’அறிவு இருக்காடானு திட்டினான் முன்ன பின்ன தெரியதவங்களை எப்படி நம்பலாம் உன் படிப்பை உபயோகிக்க வேண்டியது தான’’ அப்படினு சொன்னான். அவன் சொன்னான் ‘’படிப்பை உபயோகிச்சு அவர்கிட்ட பேசினப்பறம் அவர் நல்லவருனு முடிவு பண்ணித்தான் தங்க விட்டேன்னு சொன்னதும் அவனையும் அவன் படிப்பையும் திட்டிக்கிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்னு’’ அந்த நண்பன் சொன்னான்.

இங்க வந்து பொருள் எல்லாம் திருடிட்டு போனவரை அவர் வீட்டுல பார்த்த அவரோட மனைவி ‘’எப்படி இவ்வளவு பொருள்னு கேட்டாங்க அதுக்கு அவர் சிரிச்சிக்கிட்டே ஒருத்தனைப் பார்த்தேன் அவன் தலையில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டாத குறைதான் பேசி தூங்கறாப்ல நகர்த்திட்டேன்னு சொன்னார்’’ இதில இருந்து என்ன தெரியுது என்றான் வாசன். ‘’ஏமாத்துறவங்க ஏமாத்திட்டே இருப்பாங்க’’ என்றான் பாலு. ‘’கற்றது கையளவு கல்லாதது உலகளவு’’ சுமதி சொன்னாள். வாசன் சிரித்துக் கொண்டே ‘’ம்ம், எதிலயும் சமயோசிதமா சிந்திச்சு வாழனும், வெறும் புத்தகப் படிப்பை நம்பக் கூடாது’’ என்றதும் அனைவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்கள் .