Wednesday 14 March 2012

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (4)

பகுதி 3 

நமது உடலில் அமைந்து இருக்கும் இந்த நுரையீரல், மூச்சுக்குழல் என்பதில் எல்லாம் இந்த ஆஸ்த்மா பிரச்சினை பண்ணுவதில்லை என்றில்லை. மூச்சுக்குழல் இரண்டாக பிரிவடைந்து செல்லும் அந்த இருபகுதிகளில் ஏற்படும் இறுக்கமே ஆஸ்த்மாவுக்கு அடிப்படை காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நாம் சுவாசம் செய்வதற்கு நமது நரம்பு மண்டலம் உறுதுணையாக இருக்கிறது.

நன்றி: கூகிள்

நாம் உடற்பயிற்சி செய்யும்போதோ, ஓடும் போதோ நமது சுவாசம் அதிகரிப்பதற்கு நமது உடலுக்கு தேவையான ஆக்சிஜனை தரவேண்டியே இந்த சுவாசம் வெகுவேகமாக நடைபெறுகிறது. பெரும்பாலோனோர் மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நமது உடலில் பல விசயங்களை கட்டுபாடுக்குள் கொண்டு வரலாம் என சித்தர்கள் குறிப்பில் உள்ளதாக கூறுகிறார்கள்.

நமது உடலில் உள்ள தசைகள், செல்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் சீரான முறையில் ஆக்சிஜன் சென்றாலே போதும். தசைகள், செல்கள் எல்லாம் நன்றாக வேலை செய்யும். யோகா பயிற்சி முறைகள் உடலை கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி புரியும் என்பதில் இருவேறு கருத்தில்லை. இந்த உடற்பயிற்சி குறித்து ஒருவர் நகைச்சுவையாக சொன்னார்.

அதோ அந்த பூங்காவில் நடந்து கொண்டு இருக்கிறார்களே அவர்கள் எல்லாம் இங்கே எப்படி வந்தார்கள் தெரியுமா? என்றார். 


தெரியவில்லை சொல்லுங்கள் என்றார் மற்றொருவர். 


இதோ இந்த கார்களில் தான் வந்தார்கள் என்றார். 

வாழ்க்கையில் சில விசயங்களை எதற்கு செய்கிறோம் என்கிற ஒரு அடிப்படை உணர்வே நமக்கு மறந்து போய்விடுகிறது. நன்றாக மூக்கு முக்க சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்தால் சரியாகிப் போய்விடும் என்பது. மருந்து மாத்திரை இருக்கிறதே என கண்டபடி வாழ்க்கையை அமைத்து கொள்வது. இதை எழுதும் நான் ஒன்றும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இப்படியெல்லாம் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என நினைத்தே பொழுதுகள் கரைந்து போய்விடுகின்றன.

இந்த ஆஸ்த்மா ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மரபணுக்கள், அலர்ஜி சம்பந்தமான பொருட்கள் என குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொருவரின் நிலையம் வெவ்வேறாகவே இருக்கிறது. இன்னதுதான் என அறுதியிட்டு சொல்லமுடியாத நிலையும் கூட நிலவுகிறது. இது போன்ற இறுக்கத்தை தளர்த்தும் மருந்துகள் என சல்புடமோல் பெரிதாக உபயோகப்படுகிறது.

பிரணாயாமம் எனும் மூச்சு பயிற்சி முறை பெருமளவில் இந்தியாவில் பேசப்படுகிறது. இது குறித்து திருமூலர் எழுதிய பாடல்களை பார்க்கலாம்.
இந்த தலைப்பில் எழுதப்பட்ட பாடல்கள் என பதினான்கு பாடல்கள் தென்படுகின்றன. பாடல்கள் குறிப்பு எழுதப்பட்டே இருக்கிறது. நேரடியாக எதுவும் சொல்லாமல் இருப்பது போன்றே தென்படுகிறது. இதற்காக பிரத்தியோக தமிழை கற்று கொள்தல் அவசியமாகிறது.

பன்னிரண்டானை பகல் இரவுள்ளது
பன்னிரண்டானையை பாகன் அறிந்திலன்
பன்னிரண்டானையை     பாகன் அறிந்தபின்
பன்னிரண்டானைக்கு பகல் இரவு இல்லையே.

என்னது பன்னிரண்டு? இது குறித்து சிலர் சில விளக்கம் சொல்கிறார்கள். நமது உடலில் இருக்கும் காற்றினை எப்படி கையாள்வது என்பது குறித்தே இவரது சிந்தனையெல்லாம் இருக்கிறது.

புறப்படு புக்கு திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்பு சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

ஹீமோக்ளோபின் எனும் புரதம் நமது உடலில் உள்ள ஆக்சிஜனை எல்லா செல்களுக்க்ம் எடுத்து செல்கிறது. அப்படிபட்ட ஆக்சிஹீமொக்லோபின் சிவப்பு நிறத்திலே இருக்கும். எப்போது ஆக்சிஜன் நீங்குகிறதோ சிறு பச்சை வண்ணம் மாறி விடும். எதற்கு இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என பார்த்தால் வாய் வழியாக சுவாசித்து அந்த ஆக்சிஜன் எதற்கு ரத்தத்தில் சேரக்கூடாது எனும் சிந்தனை நமக்கு தேவைப்படுகிறது. மேலும் திருமூலர் சொல்கிறார்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளரில்லை
காற்றை பிடிக்குங் கணக்கறி வாளர்க்கு
கூற்றை யுதைக்குங் குறியது வாமே

இப்போது ஆஸ்த்மா உடையவர்கள் இந்த கணக்கை எல்லாம் அறிந்து கொண்டால் தீர்வாகி விடுமா என்றால் இதை சொல்வது மிகவும் கடினம். காற்றே உட்புக வழியின்றி போம்போது அங்கே எப்படி எதை பிடித்து நிறுத்துவது?

இந்த உலகில் ஆஸ்த்மாவினால் கிட்டத்தட்ட முன்னூறு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. கிட்டதட்ட 250,000 மக்கள் வருடந்தோறும் உலகில் இறக்கிறார்கள். இந்த ஆஸ்த்மாவிற்கு முறையான சிகிச்சைகள் இல்லையெனினும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையின் மூலம் கட்டுபடுத்தலாம் எனவும் ஆய்வு சொல்கிறது.

ஆஸ்த்மாவிற்கான அறிகுறிகள் என மூச்சு இழப்பு, நெஞ்சில் இறுக்கம், தொடர் இருமல் போன்றவை ஆகும். இப்படி வரும்போது உடனடியாக மருந்தினை எடுத்துகொள்வது பயன் தரும். ஆனால் இது போன்ற சூழலில் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லதாகும்.

எந்த ஒரு நோயையும் உதாசீனபடுத்துவது நம்மில் பெரும் அபாயத்தை விளைவிக்கும். தெரிந்தே அந்த தவறை நாம் செய்து கொண்டே வருகிறோம்.

(தொடரும்)




No comments: