Tuesday 6 January 2009

அறுபத்தி நான்காம் மொழி - தொடர்கதை

1.

பிறந்து வளர்ந்தபோது ங்கா சொல்லாமல் வளர்ந்த குழந்தை. மேலும் வளர்ந்தபோதும் ம்மா என்று சொன்னதே இல்லை. பள்ளிக்குச் சென்று சேர்த்தபோது உன் பெயர் என்ன என இவனைக் கேட்டபொழுது 'மிங்கி மிங்கி பா' என்று மட்டுமே சொன்னது. ஆனால் நாங்கள் வைத்ததோ நாவரசன். இன்று நாவரசனுக்கு இருபது வயதாகிறது. மிங்கி மிங்கி பா வைத் தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை. நாங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது. சாதாரணமானவனாகவே இருந்தான். பள்ளிக்குச் சென்றபோது பிறர் இவனைக் கேலி செய்ததால் நாங்கள் வலுக்கட்டாயமாக இவனை பள்ளிக்குச் செல்லாமல் நிறுத்திவிட்டோம்.

யார் என்ன கேட்டாலும் மிங்கி மிங்கி பா மட்டுமே. எத்தனையோ மருத்துவர்களை பார்த்தாகிவிட்டது. எந்த குறையும் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். சிறு வயதாக இருக்கும்போதே பேச்சுப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றோம். அங்கே அவர்கள் பேச இவன் பார்த்துக் கொண்டே இருப்பான், ஆனால் அவர்கள் சொல்வது போல சொல்லவும் மாட்டான். ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் எனக் கேட்டபோது மிங்கி மிங்கி பா என்று மட்டுமே சொல்வான். அவர்களால் எதுவும் செய்ய இயலாது என கூறிவிட்டார்கள். வேண்டாத கோவில் இல்லை. எப்படியாவது இவனை பேச வைத்துவிடு என எத்தனையோ விரதம் இருந்துவிட்டேன்.

முதலில் எரிச்சலாக இருந்த எங்களுக்கு பின்னர் பழகிப் போனது. இப்பொழுதெல்லாம் எதையுமே கேட்பது இல்லை. எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என ஒருநாளும் வந்து கேட்டதும் இல்லை. எழுதப் பழகிக்கொண்டாலாவது எழுத்தில் மூலம் கேட்கட்டும் என எழுதச் சொல்லிக்கொடுத்தோம். ஒரு எழுத்தையும் படிக்காமல் சரியாக மிங்கி மிங்கி பா மட்டும் படித்துக் கொண்டான். எழுத்து மாற்றி எழுதவே மாட்டான். மிங்கி என்பதை அம்மா என சொல்லிக் கொடுத்திருக்கலாமோ என சில நேரங்களில் எனக்குத் தோன்றும். அவன் அம்மா என எழுதியாவது நான் பார்த்திருப்பேன். எங்களுக்கு மேலும் சில குழந்தைகள் இருந்ததால் இவனைப் பற்றிய கவலை அதிகம் துரத்தியதில்லை.

எந்த வேலைக்குச் செல்வான் எப்படி வாழ்வான் என இருந்தால் சரியாக பதினாறு வயதானபோது எங்கள் ஊருக்கு அருகாமையில் இருந்த ஒரு உடல்நலமற்றோர் காப்போர் இல்லத்துக்குச் சென்று அவனாகவே வேலைக்குச் சேர்ந்துவிட்டான். இதை என் கணவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னால் என்ன கேட்க முடியும்? மிங்கி மிங்கி பா என்று மட்டுமே பதில் சொல்லப் போகிறான். ஆனால் நான் அவன் வேலை சேர்ந்த இடத்தில் சென்று விசாரித்தேன். மிங்கி மிங்கி பா என்று மட்டுமே சொன்னதாக சொன்னார்கள். அவனது அம்மாதான் நான் என சொல்லி அவன் மனவளர்ச்சி குன்றியவன் இல்லை என்று மட்டும் சொன்னேன். என் கணவர் இதற்கு முன்னரே இதை சொல்லியிருக்க வேண்டும், எங்களுக்குத் தெரியும் என்றே சொன்னார்கள்.

இப்படியாய் இருந்த நிலையில் ஒரு பெண் இவனைப் பார்த்து மிகவும் நேசமாக சில நாட்கள் பழகி வருவதாக பக்கத்து வீட்டு ஜெயராணி நேற்றுதான் சொல்லிவிட்டுப் போனாள். எனக்கு மனதில் சின்ன ஆசை பிறந்தது. ஒருவேளை அந்தப் பெண் இவனுக்குப் பேச கற்றுக்கொடுத்துவிடலாமே எனத் தோன்றியது. யார் அந்தப் பெண் என்று விசாரிக்கத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

(தொடரும்)